top of page
autumn-brown-leaves-shapes-pattern.jpg

இந்த சாதனை "லௌகீக நிலையில்"
"நான்", "என்னால்", " என்னுடையது"  என்ற "உடைமை", "உரிமை" அழிய, ஒரு சாதகன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் ஆகும்.

 

நித்திய சாதனை என்பது ஒரு மாணவன் நித்தம் அனுஷ்டிக்க வேண்டிய  ஆரம்ப நிலை சாதனையாகும். இந்த உடல், உலக பந்தங்களில் விரக்தியுற்று,

 

"நான் யார்?", "உலகத்தின் உண்மைப் பொருள் என்ன?", "தெய்வம் எங்கே இருக்கிறது?, "என் துன்பத்திற்கு காரணம் எது?", "அத்துன்பத்திலிருந்து விடுபடும் வழி யாது?"

 

என தீராக்கேள்வியுற்று விடை தேட ஆரம்பிக்கும் சீடனுக்கு சாஸ்திரம் வழிகாட்ட ஆரம்பிக்கிறது. தீர்க்கமான அச்சாதகன் பன்னிரண்டு வருடம் சத்குருவிற்கு "ஸர்வாங்க சேவை" செய்தபின், அம்மாணவனின் நிலைகண்டு, சத்தியத்தை போதிக்கிறார். இந்த பாடத்தை உள்ளபடி உணர சாதகனுக்கு சுமார்  ஆறு ஆண்டுகள் அவசியமாகிறது,

 

ப்படிப்பட்ட ஓர் உண்மைச் சாதகன் பின்பற்றவேண்டிய சாதனையாக ஸ்ரீ சத்குருதேவர் பரிந்துரைப்பது யாதெனில்? 

நித்ய சாதனை

அடங்கி இரு; அடக்க எண்ணாதே!
உன் கரண ஒழுக்கமே உன்னை காப்பாற்றும்!
பெண், பொன் இவற்றில் சர்வ ஜாக்கிரதையாக இரு!
கடும்சொல், சுடும்சொல் பேசாதே!
எங்கும், எந்நிலையிலும் குற்றம் குறை காணாதே!
அப்படி தோற்றின் அவை உன்னிடமே என உணர்!
உணர்ந்த உடன் மற, மன்னி, விட்டுக் கொடுத்து விலகு!
இறை, குரு நாமஸ்மரணையுடன் எந்த வினாடியும் இரு!
இனிமையாகவும், இதமாகவும் பேசு; ஆனால் பேச்சைக்குறை!
உடல், உலக, சினிமா மற்றும் காமரசனையாகப் பேசாதே!
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்!
பணிவே பரம்பொருள்!
இறை நாமத்துடன் துணிவே துணை!
கர்மாவின் செய்கை உனக்கு; அதன் பலன் அவனுக்கு!
ஆணவத்தை அன்பால் வெல்!
ஆசைகளை மனநிறைவால் வெல்!
பொறுமையை உடையவர் இகழ்வை அடையார்!
ஆத்திரம் அறிவு நாசம்; மனதின் சூத்திரம் அறிவின் கூர்மை!
நீ உன்னை ஆளவந்தவன்; உலகில் ஆழ வரவில்லை!
தீயதாக கேளாதே; தீயதாக பார்க்காதே; தீயதாக பேசாதே! | இவை அனைத்தும் உன் மனஎண்ணமே
வார்த்தைக்கு வார்த்தை எதிர்வார்த்தை பேசாதே!
காண்பதையும், கேட்பதையும் நம்பி பேசிவிடாதே!
பேச்சு ஒரு முடிவாகாது; மௌனமே முடிவாகும்!
நீ மதிப்பு கொடுத்தால் உனக்கு மரியாதை கிடைக்கும்!
எவரிடமும் பணிவுடனும், கனிவுடனும் இரு!
வார்த்தையினால் நீ புண்படாதே; பிறரையும் புண்படுத்தாதே!
மனத்தெளிவு வேண்டுமா? நிதானத்தை கடைபிடி!  | நீ+தானம் = நிதானம்
போட்டி போட்டால் கோட்டியில் (பைத்தியம்) முடியும்!
வார்த்தை அடர்ந்த காடு; உட்புகுந்தால் வெளியே வரமுடியாது!
வாக்கு அக்கினியாகும்; அதைக் காப்பதே தபஸாகும்!
செய்கை; செய்கையின் தன்மை; அதன் பயன் உனக்கில்லை!
இயற்கையே (இறைவனே) அதனதன் செய்கையை செய்கிறது!
இயற்கையிடம் பாரபட்சதோஷம் இல்லவே இல்லை!
கவனக்குறைவினால் ஜீவன் மயங்குகிறான்!
உன் வாக்கே உன் வாழ்வாக முடிகிறது!
இறைவன் நல்லவன் என்று எவனையும் ஏற்பதும் இல்லை!
இறைவன் பாபி என்று எவனையும் தள்ளுவதும் இல்லை!
ஜீவனின் புண்ணியபாப பலன் அவரவர்க்கு ஒழுங்காக அமைகிறது!
கர்மாவின் பலன் ஆத்மாவைப் பற்றாது!
இறைநாமாவை முன்வை; உன் கர்மாவைப் பின்வை!
அவனன்றி அணுவும் அசையாது, இது ஸத்ய வாசகமே! ஆனால் இம்மொழி லௌகீகத்திற்கும் தெய்வீகத்திற்குமே உண்டு!
இம்மொழி பரமார்த்தீகத்திற்கு இல்லை! அங்கு நீயும் அவனும் ஒன்றே!
சர்வார்ப்பணமாக வாழ்பவன் வாழ்வில் அமைதி, ஸாந்தி நிலவும்!
விருப்பும் வெறுப்பும் வாழ்வின் துன்பமே!
கோபமும் ஆசையும் கணவன் மனைவி போன்றதாகும்!
இந்த இரண்டும் இணைந்தால் பயம் துக்கம் என்ற பிள்ளைகள் உண்டு!
பிறப்பும் இறப்பும், நினைப்பும் மறப்பும் போன்றதாகும்!
உலகில் வாழ சற்று ஆசையும் கோபமும் இருக்கலாம்!
உலகின் நிலையில் விரோதம், குரோதம், மோஹம் கூடாது!
ஓர் சாதகனுக்கு சந்தேகம் சர்ப்பம் போன்றதாகும்!
ஓர் சாதகனுக்கு கடும்தூக்கமும், சோம்பலும் காலனாகும்!
புண்பட்ட மனதிற்கு ஆத்ம போதனையே சாந்தி!
இக்கலியில் சரணாகதியைத் தவிர வேறு கதி மோட்சம் இல்லை!
இக்கலியில் இறை நாமாவைத் தவிர வேறு வழி இல்லை!
குணதோஷ வார்த்தைகள் வந்தால் நீயே கலிபுருஷன்!
இறை உணர்வோடு அமுதவாக்கு வந்தால் நீயே கற்க்கி அவதாரம்!
உன் மனம் உனக்கு எதிரி; உன் மனசாட்சி உனக்கு நண்பன்!
உடல் உலக பொருள்களை விரும்பினால் தெய்வத்தை விட்டுவிடு!
தெய்வத்தை விரும்பினால் உடல் உலக பொருள்களை விட்டுவிடு!
அருளும் பொருளும் இரு துருவமாகும்! ஒன்று சேராது!
எங்கேயோ தெய்வம் இருக்கிறதென ஓடித் தேடுவது "அஞ்ஞானம்" - "துவைதம்"
தெய்வம் நம்முன் இருப்பதென்பது "பக்தி"  - "விஸிஷ்டாத்துவைதம்"
தெய்வம் நம்முள் நாமாக இருப்பதை உணர்வது "ஞானம்"  - "அத்வைதம்"
நடந்ததை எண்ணினால் ஏமாழி!
நடக்கப்போவதை எண்ணினால் புறவாழி!
நடப்பதாக இருப்பவன் அறிவாழி!
இந்த மூன்றுமற்றவன் பரவாழி!
வேகத்தை விடு; விவேகத்தை தொடு!
நலமும் சுகமும் உன் மனதிடமே; அவை வெளியில் இல்லை!
சொர்க்கமும் நரகமும் உன் கற்பனையே!
முதலில் பணியக் கற்றுக்கொள்; கட்டளையிடும் பதவி தாமே வரும்!
அடியவனாயிரு; அடியாளாய் மாறிவிடாதே! (குரோதம் முதலிய வெறி உணர்வுடன்)
சாந்தமே சாகரத்தினும் பெரியது!
பொறுமையே முக்தியின் திறவுகோல்!
பேராசையே பொறாமையின் அடிப்படை!
ஜலமும், பிருதிவியும் முறையே புண்ணிய பாப கர்மாக்கள்!
அக்கினி தெய்வ அம்ஸம் பொருந்தியது!
கர்மா கீழ் நோக்கி இழுக்கும்; தெய்வம் மேல் நோக்கித் தள்ளும்!
விளக்கத்தின் நிமித்தம் வாதம் செய்யலாம்!
முரட்டுத்தனத்தின் நிமித்தம் பிடிவாதம் கூடாது!
வேதசாஸ்திர பாட நிமித்தம் தர்க்கம் செய்யலாம்!
தம் வாக்கையே ஸ்திரப்படுத்த குதர்க்கம் கூடாது!
லௌகீகத்திற்கும், தெய்வீகத்திற்கும் தர்மாதர்மம் உண்டு!
பரத்திற்கு தர்மாதர்மம் இல்லவே இல்லை!
ஒன்று செய்; அதுவும் நன்று செய்; அதுவும் அன்றே செய்!
எல்லாம் ஈசன் செயலென்றால் அங்கு புண்ணியபாபம் இல்லவே இல்லை!
நீ நலம் பெறவேண்டுமா? உன் நாவை அடக்கு!
அஸத்தியம் பேசுவதென்பது இறை சிந்தனை இல்லாமல் பேசுவதாகும்!
இறை சிந்தனை இல்லாமல் கொடுப்பதும், வாங்குவதும் புண்ணிய பாபம்!
இறை சிந்தனையோடு கொடுப்பதும், வாங்குவதும் ஸத்யமும் தர்மமுமாகும்!
தெய்வ கிருபை நவக்கிரஹ பிடியிலிருந்து விடுவித்து அனுக்ரஹம் பண்ணும்!
குருகிருபை அஞ்ஞான இருளை அகற்ற ஆசி வழங்கும்!
இரண்டு என்ற இடத்தில் பயம் உண்டு; ஒன்றென்ற அனுபவத்தில் பயம் இல்லை!
இறைவன் தோன்றாத்துணைவன்; ஆத்மா அந்தர்யாமி; பரமாத்மா சர்வாந்தர்யாமி!
அதன் (பிரம்மம்) ஒளியாலேயே அனைத்தும் பிரகாசிக்கிறது!
அனைத்தின் அம்ஸம் அதனிடத்தில் இல்லவே இல்லை!
அது கர்த்தாவுமல்ல; போக்தாவுமல்ல; ஆனால் அனைத்தும் அதுவே!
அனைத்து ஜீவகோடிகளும் பெண்; அந்த பரமாத்மா ஒன்றே ஆண்!
"அறியாமை" என்பது காண்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, ஸ்பரிசிப்பது ஆகியவற்றை நாமரூப குணத்துடன் நாவால் விவகரித்து
"குணதோஷங்களை கற்பனையால் உண்டுபண்ணுவது!"
"ஞானம்" (அறிவு) என்பது சத்யத்தை போதித்து (ஒலி கொடுத்து), தர்மத்தை நிலை பெறச்செய்து (ஒளியை உண்டு பண்ணி)
"இரண்டற்ற தாம் தாமாயிருப்பது!"
நாமரூபமாகக் கண்டால் குணதோஷங்கள் தோற்றும்;
அனைத்தும் இறைவனாகவும், இறைவன் உடமையாகவும் உணர்ந்தால் "சத்வகுணம்" ஒன்றே பிரகாசிக்கும்;
அனைத்தும் நாமே என உணர்ந்தால் "பிரம்மானந்தமாகவே" நாம் இருக்கலாம்!
நாமே இரண்டானோம் (ஜீவன், ஆத்மா); நாமே பலவானோம் (ஆத்மா, ஜீவன், உலகம்); இந்த பலவற்றையும் இரண்டாக்க வேண்டும்;
பின் இரண்டையும் ஒன்றாக்க வேண்டும்; பின் அந்த ஒன்றும் இல்லையென்றாகிவிடும்; அது காலாதீத ஒன்றே!
"நாமரூபமாகக்" கண்டால் "உலகம்" தெரியும்; "ஏககுணமாக" (ஸத்வம்) உணர்ந்தால் "தெய்வம்" தெரியும்.
"குணாதீதமானால்" (நிர்க்குணமானால்)"அனைத்தும் மறையும்!" அங்கு “அது நீயே; நீயே அது!”
உலகமாகக் கண்டால் “விளையாட்டு”; தெய்வமாக உணர்ந்தால் “ரஸனை” (ரசித்து ஆனந்திப்பது);
தாமாக உணர்ந்தால், விளையாட்டும் இல்லை; ரஸனையும் இல்லை; கேட்பாரும் இல்லை; விளங்கும் பொருளும் இல்லை என்றாகிவிடும்!
அனைத்தும் தெய்வமாக உணர சாட்சிபாவம் தேவை; இது அழுது கரைந்தால்தான் கிட்டும். இங்கு உருக்கம் அதாவது கசிந்து அழுதால் வினை கரையும். அனைத்தும் நாமாக உணர சர்வசாட்சிபாவம் தேவை. இங்கு சிரிப்புத்தான் உண்டாகும். (அழாமல் சிரிக்க முடியாது)
எமக்குள்ளே நீ இருக்க; உமக்குள்ளே யாம் இருக்க, இந்த மன அசைவு நின்றால் போதும். இதற்கு ஒரே வழி “அது நாம்; நாமே அது”
இங்கு சொல்வதற்கும் இல்லை; ஆவதற்கும் ஒன்றுமில்லை; “உன் உள் உணர்வே” ஆதாரம்.
நடந்து முடிந்தவற்றில் எண்ணம் இல்லாதவனும்,
நடக்கப் போவதில் கற்பனை பண்ணாதவனும்,
நடப்பனவற்றை இல்லை இல்லை என உறுதி பண்ணியவனும்
உண்மையான "ஆத்மசாதகன்" ஆவான்.
“கண்கள் கொண்டு பார்த்தால் வேஷம் தெரியும்”, 
“மனக்கண் கொண்டு பார்த்தால் துவேஷம் தெரியும்”,
“அறிவுக்கண் கொண்டு உணர்ந்தால் அனைத்தும் மறையும்”.
"அகம் பிரம்மம்"; "ஜகம் பிரம்மம்";"அகமே எல்லாம்";
"ஜகம்பரமும்"; "ஜீவர்களும்" சிறிதுமில்லை.
இகத்தைக் கண்ட கண்கள் இறைவனைக் காணாது! 
இறைவனைக் கண்ட கண்(மனம்) பரத்தைக் காணாது!!
பரத்தை உணர்ந்த அறிவு அங்கு எதுவும் இராது!!!
அதுவே மஹாமௌனம்!!!!
bottom of page