top of page

இந்த சாதனை "தெய்வீக நிலையில்", "எல்லாம் நீ" என "சர்வார்ப்பணம்" செய்ய முற்படும் ஒரு சாதகன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் ஆகும்.

மிகுந்த பொறுமையுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், ஆணித்தரமான வைராக்கியத்துடனும், சுமார் 18 ஆண்டுகள் குரு வாக்கியார்த்த சிரத்தையுடன், நித்ய சாதனைகள் கைவரப்பெற்ற, தீரமான சீடன் பலப்பலவாய் தோற்றிய எல்லாவற்றையும், அதாவது, "நான் வேறு", "உடல் வேறு", "அனுபவம் வேறு" என்ற திரிபுடியின் நிலையிலிருந்து, "நாம்" என்று இரண்டாக்கி அதாவது, "நானும்", "இறைவனும்" என்ற தெய்வீக நிலையில் "எல்லாம் நீ!", "எல்லாம் உன்னால்!" "எல்லாம் உனதே!" என உறுதிவரப் பெற்ற சத்சிஷ்யனுக்கு ஸ்ரீசத்குருவானவர் ஆத்ம ஞான பாடத்தை ஆரம்பிக்கிறார். இதனை "ஆத்மபாவ சேவை" என்று பெரியோர்கள் உரைக்கிறார்கள்.

அச்சீடனுக்கு ஸ்ரீ சத்குருதேவர் அறிவுறுத்தும் சாதனைகளாவது யாதெனில்?

ஆத்ம ஞான சாதனை

அன்புக் குழந்தைகளே! திட வைராக்கியம் என்பது,

இறைவா! நான் உன் கை பதுமை! நான் ரதம்; நீ சாரதி!
என் மனைவி மக்கள் உன்னுடையதே! என் உடைமையும்; என் தொழிலும் உன்னுடையதே!
இந்த உலகமாகிய நாடக மேடையில் என்னை ஆடி நடிக்கவிட்டிருக்கிறாய்! என் ஒவ்வொரு செயலையும், அசைவையும் நீ கவனித்தே வருகிறாய்!
என் தேவைகளைக் கொடுத்தும், தேவையற்றதை எடுத்தும் எத்தனை சிறப்பாக காரியத்தை முடிக்கிறாய்!
உனக்குத்தான் என் மீது எத்தனை கருணை! எத்தனை வாத்ஸல்யம்! எத்தனை பரிவு!

உன் கருணையின் பார்வையில் எனக்கு வறுமை ஏது? எனக்கு எந்த வறுமையும் இல்லை.
உன் அன்புப்பார்வையில் எனக்கு வியாதி ஏது? எனக்கு எந்த வியாதியும் இல்லை.

உன் தொழிலில் எனக்கு தாழ்ச்சி ஏது? எனக்கு எந்த தாழ்வும் இல்லை.


என உங்கள் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஒவ்வொரு வார்த்தையிலும்,

ஒவ்வொரு பார்வையிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும்,
அவனையே காணுங்கள்!
அவனையே பேசுங்கள்!
அவனோடு உறவாடுங்கள்!
அவனோடு உரையாடுங்கள்!
உங்கள் வாழ்க்கை சுகம் பெறும்! நலம் பெறும்! முடிவில் ஒன்றாகும்.!

bottom of page