top of page
brown-watercolor-leaf-background-aesthetic-autumn-season.jpg

ஸ்ரீமத் ரிபு கீதை

வேதங்கள் அனைத்திற்கும் ரத்தினமாய் திகழும் அத்வைத வேதாந்தத்தின் சாராம்சமாக திகழ்வது ரிபு கீதை. 

ரிபு கீதை 18 புராணங்களில் ஒன்றான, ஸ்கந்த புராணத்தில் உள்ள சிவ ரகசியத்தின் ஆறாவது பகுதி ஆகும். பகவான் ஸ்ரீ வியாசர் தொகுத்த இந்த சிவரகசியம் கேதாரத்தில் ரிபு முனிவர் தம் சீடனாகிய நிதாகனுக்கு உபதேசித்ததாகும். 

          ரிபு முனிவர், நிதாகனுக்கு உயர்ந்த அத்வைத  தத்துவங்களை உபதேசித்தும் தன்னறிவு பெறவில்லை.

ஆகையால் தன் சீடன் நிலை அறியும் பொருட்டு அவனை காண செல்கிறார். 

அப்போது அவ்வூர் அரசன் ஓரு பட்டத்து யானை மீதேறி  நகர்வலம் சென்று கொண்டிருந்தார்.

அங்கு நிதாகன் பசி மயக்கத்தில் கூட்டம் இல்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தான்.

ரிபு முனிவர் நிதாகனைப் பார்த்து "ஏன் இங்கு நிற்கிறாய்?" என்றார். 

அதற்கு நிதாகன் அவரிடம் "அரசன் நகர் வலம் வருகிறார், கூட்டமாக இருக்கும் காரணத்தினால் ஒதுங்கி நிற்கிறேன்" என்றான்.

அதைக் கேட்ட ரிபு முனிவர் "இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார்?" என வினவினார்.

நிதாகன் அவரைப் பார்த்து "உங்களுக்கு கண் தெரியவில்லையா?"

குன்று போலிருக்கும் இந்த யானையில் அமர்ந்திருக்கிறார் அல்லவா, அவரே அரசர்!

அவரை சுற்றியிருக்கும் மற்றவர்கள் மக்கள்" என்றார்.

ரிபு முனிவர் மீண்டும் ஒன்றும் அறியாதது போல

"இரண்டு பொருட்களை சுட்டிக்காட்டி ஒன்றை யானை என்றும், மற்றொன்றை அரசனென்றும் கூறுகிறாய்!,

இவற்றில் எது யானை?, எது அரசன்? என்று எனக்கு விளக்கமாக சொல்" என்றார். 

அதற்கு நிதாகன் , "ஐயா! கீழேயுள்ளது யானை, மேலிருப்பவர் அரசர், இதில் என்ன குழப்பம்? இது கூடவா புரியவில்லை!" என்றார். அதற்கு ரிபு முனிவரோ "கீழ்", "மேல்" என்றால் என்ன? அதை விளக்கு" என்றார்.

கோபத்தில் ரிபு முனிவரின் தோள்களில் தாவி ஏறிக்கொண்ட நிதாகன்,

அரசன் யானை மேல் அமர்ந்திருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன்.

அங்கு கீழே உள்ளது யானை, இங்கு கீழே இருப்பது நீங்கள்! மேலேயிருப்பது இருப்பது நான்!  இப்போது புரிகிறதா?" என்றார். 

அதற்கு, ரிபு முனிவரோ முதலில் "நான்", "நீ" என்பதை விளக்குவாயாக,

பின்பு அதை வைத்துதான் அரசனையும், யானையும் புரிந்து கொள்ள இயலும் என்றார்.

           

இந்தக் கேள்வியைக் கேட்டதும் வந்திருப்பவர் தனது குருவான "ரிபு முனிவர்" எனப் புரிந்து கொண்ட நிதாகன் அவரைப் பணிந்து, தண்டனிட்டு, தொழுது தனக்கு மீண்டும் உபதேசிக்க வேண்டுகிறான். ரிபு முனிவரும் கருணை மேலிட ரிபு கீதையை உபதேசிக்கிறார். 

இந்நூல் ஐம்பது அத்தியாயங்கள் கொண்டது,  2493 ஸ்லோகங்களை உள்ளடக்கியது. வடமொழியில் உள்ள இந்நூலை  ஸ்ரீ உலகநாத ஸ்வாமிகள் என்னும் ப்ரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள், தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப் பாக்களாக மொழி பெயர்த்துள்ளார். 

         

         "அத்வைத வேதாந்தம்" இரண்டற்ற நிலையை உபதேசிக்கிறது. அதாவது,

"பிரம்மத்தின் இரண்டற்ற நிலை",

"பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை"

"உலகத்தின் உண்மையற்ற நிலை"

ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அத்வைத வேதாந்தத்தை உபதேசிக்கப் பல்வேறு நூல்கள் வேதங்களில் இருந்தாலும் பலப்பல கற்றுணர்ந்த மகான்கள் அத்வைத நூல்களை இயற்றி இருந்தாலும், ரிபு கீதை வேதாந்தக் கருத்தை மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும், உள்ளது உள்ளபடி உரைக்கிறது. அதனால், இந்நூல் அனைத்து அத்வைத நூல்களினும் சிறப்பு பெற்றது.

"ஸ்ரீ சத்குரு தூளி பாபா" அவர்கள் இந்நூலை முழுவதும், ஆனந்தமாய் அனுபவித்த பின்னர், அதில் 140 பாடல்களை மட்டும் எடுத்து "ஸ்வய ஞானானுபவம்" என்ற பெயரில் தமது அன்பர்களுக்கு, நித்ய பாராயணம் செய்ய உபதேசித்தார். இந்த ஸ்வயஞானானுபவ நூலிற்கு பொருளுரை, கருத்துரை, விளக்கவுரை, தெளிவுரை, தெளிநிலை, ரகசியம் மற்றும் ரசாம்சம் எனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார் எழுதியுள்ளார். அவருடைய அன்பர்கள் அனைவருக்கும் இந்நூலையே சாதனமாக கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

bottom of page